பானிபூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற போதை ஆசாமிகள்!

பல்லடம் அருகே பெருந்தொழுவில் பானி பூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு, மது போதையில் இருந்த நான்கு பேர் பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சிசிடிவி…

பல்லடம் அருகே பெருந்தொழுவில் பானி பூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு, மது போதையில் இருந்த நான்கு பேர் பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர்
பெருந்தொழுவில் 10 வருடங்களாக பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று, திருப்பூரை சேர்ந்த அஸ்வின், பூவலிங்கம், தினேஷ்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சக்தி கணேஷ் ஆகியோர் சதீஷின் பேக்கரிக்கு மது போதையில் வந்துள்ளனர்.

நான்கு பேரும் பானி பூரி ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர். பானிபூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி உரிமையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், பானிபூரி தட்டை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் திரும்பி
வந்த அவர்கள் காலி மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பேக்கரி மீது வீசி உள்ளனர்.

பெட்ரோல் குண்டு வெடிக்காத நிலையில் அங்கிருந்து நால்வரும் இரு சக்கர
வாகனத்தில் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக, சதீஷ்குமார் அவிநாசி பாளையம்
காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சி பதிவுகளை
வைத்து போலீசார் நான்கு பேரையும் தேடி வந்தனர்.

இன்று பிற்பகல், நான்கு பேரையும் அவிநாசி பாளையம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில் திருப்பூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவன் மீது ஆறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

—ம. ஶ்ரீ மரகதம்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.