கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கோரிய மனுக்கள் முடித்துவைப்பு!

கஜா புயலால் பலியானோரின் குடும்பத்திற்கு, ரூ.30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட கோரிய பொது நல மனுக்களை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

மதுரை மேலூர், எட்டிமங்கலம் பகுதியை சேர்ந்த பி.ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டம் ஜி. திருமுருகன் உள்ளிட்டோர் கடந்த 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுக்களில்,

“கஜா புயல் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாட்டில், குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில், மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. எனவே கஜா புயலால் பலியானோரின் குடும்பத்திற்கு, ரூ.30,00,000/- இழப்பீடும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு தென்னை மரத்திற்கு ரூ.50,000/- இழப்பீடும், நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.50,000/- இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் S.M. சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, தேவையான அளவு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது” என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மனுதாரர்கள், கஜா புயலுக்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவிடம் மனு அளித்து உரிய நிவாரணம் பெறலாம் என கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.