ஏர் இந்தியா விமான விபத்து – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இபிஎஸ் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தால் ஏற்பட்ட துயரத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இபிஎஸ் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி இன்று(ஜூன்.12) பிற்பகல் 1 மணியளவில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமான புறப்பட்ட சில நிமிடங்களில் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுக்கியது.

விபத்துள்ளான இந்த ஏர் இந்தியா 171 விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசியகள் என மொத்தமாக 242 பேர் பயணித்துள்ளர். இதுவரை வெளியான தகவலின்படி குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிகிறது. மேலும் விமானம் விழுந்த பகுதியில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.|

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,  “அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் நடந்த ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருடனும், விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், மதியம் 1:17 மணியளவில் இயந்திரக் கோளாறு காரணமாக, விமான நிலையம் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக வரும் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள அனைவரும் விரைவில் பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.