அகமதாபாத் விமான விபத்து எதிரொலி – சென்னையில் 3 விமான சேவைகள் ரத்து!

அகமதாபாத் விமான விபத்து எதிரொலியாக, சென்னையிலிருந்து புறப்படும்1 விமானம், மற்றும் வருகை விமானம் 2 என மொத்தம் 3 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

குஜராத் அகமாதபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ தொலைவிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் அகமதாபாத் விமான நிலைய ஓடுபாதை மூடப்பட்டது. இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் இருந்து அகமதாபாத்திற்கு 132 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்றது.

அகமதாபாத் விமான நிலைய ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், அங்கு தரையிறங்க முடியாத நிலையில், விமானம் சென்னைக்கே திரும்பி வர விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து பாதி தூரம் சென்ற விமானம், மீண்டும் சென்னைக்கே மாலை 3.05 மணிக்கு வந்து தரையிறங்கியது.

மேலும் மாலை 5.45 மணிக்கு அகமதாபாத் செல்ல வேண்டிய இண்டிகோ விமானமும், அகமதாபாத்தில் இருந்து மாலை 6.55 மணிக்கும், இரவு 10.10 மணிக்கும் சென்னை வர வேண்டிய 2 விமானங்களும் ரத்து செய்யப்படும். இந்த விமானத்தில் பயணம் செய்ய உள்ள பயணிகளுக்கு முழு தொகை திருப்பி வழங்கப்படும். அல்லது வேறு தேதிக்கு மாற்றி கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.