‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை திரையிடக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மண்டியிட்டு மனு அளித்தனர்.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில்
வெளியானது. ’தி கேரளா ஸ்டோரி ’ திரைப்படம் இஸ்லாமிய சமூகத்தினை தவறாக சித்தரிப்பதாக கருத்து எழுந்த நிலையில், வெளியான திரையரங்குகளின் முன் காட்சிகளை ரத்து செய்ய கோரி சமூக அமைப்புகளினால் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆனால், இத்திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் வெளியானதை தொடர்ந்து , திரைப்படம் ஒரு நாள் மட்டுமே திரையரங்கில் காட்சியிடப்பட்டது. குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் இரண்டு நாட்கள் காட்சியிடப்பட்டது.இதனையடுத்து, பாஜக உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் இத்திரைப்படத்திற்கு, அரசு உரிய பாதுகாப்பு வழங்கி திரையிட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், திரைப்படம் எந்த திரையரங்குகளிலும் திரையிடப்படவில்லை.
இதனால், ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க நிறுவனத் தலைவர் லோட்டஸ்
மணிகண்டன் தலைமையில், இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவும்
மற்றும் திரையரங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட கோரியும், கோவை மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் பதாகைகளை ஏந்தி மண்டியிட்டு மனு அளித்தனர்.
-கு. பாலமுருகன்







