அந்த தருணத்தை சிறந்தவொரு நினைவாக மாற்றிக்கொள்ள வேண்டுமென முடிவு செய்து சட்டையில் ஆட்டோகிராஃப் வாங்கினேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறினார்.
கடந்த மே 14-ம் தேதி ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் 61-வது லீக் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. சென்னை சேப்பாக்கத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த சீசனில் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே பங்கேற்கும் லீக் சுற்றின் கடைசி போட்டி இது. மேலும் இந்த சீசனோடு எம்.எஸ்.தோனி ஓய்வுபெறுவார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
போட்டியின் முடிவில் இந்த சீசன் முழுவதும் அபாரமான ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தோனி தனது கையொப்பமிட்ட பந்துகள், தொப்பிகள் மற்றும் கையுறைகள் போன்றவற்றை ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்தார். அப்போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், திடீரென தோனியிடம் நேராக ஓடி பேனாவை கொடுத்து தன் சட்டையில் ஆட்டோகிராப் போடும்படி கேட்டுக் கொண்டார். தோனியும் அவர் கேட்டபடி ஆட்டோகிராப் போட்டு, அவரை கட்டி அணைத்துக் கொண்டார். சுனில் கவாஸ்கர் ஒரு சாதாரண ரசிகரைப் போல தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து சுனில் கவாஸ்கா் கூறியதாவது:
சேப்பாக்கம் மைதானத்தில் அதுவே சென்னையின் கடைசி ஆட்டமாகும். போட்டிக்கு பிறகு தோனி உள்ளிட்ட சென்னை அணியினா் மைதானத்தில் வலம் வருவதை பார்த்தேன். அந்தத் தருணத்தை சிறந்தவொரு நினைவாக மாற்றிக்கொள்ள வேண்டுமென முடிவு செய்தேன். அதனாலேயே அப்போது தோனியிடம் சென்று எனது சட்டையில் ஆட்டோகிராஃப் வாங்கினேன். ஒருவேளை பிளே-ஆஃப் ஆட்டத்தில் மீண்டும் அவா் சென்னையில் விளையாடலாம்.
இந்திய கிரிக்கெட்டுக்கு அளவிட முடியாத பங்களிப்பை செய்திருக்கும் தோனி, எனது விருப்பத்தை ஏற்று ஆட்டோகிராஃப் இட்டது உணா்வுப்பூா்வமான தருணமாக அமைந்தது. கபில் தேவ் 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை ஏந்தியது, மற்றும் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கான சிக்ஸரை தோனி அடித்தது, ஆகிய இந்த இரண்டு நிகழ்வுகளையும் மீண்டும் ஒருமுறை நிஜத்தில் பாா்க்க ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்.







