வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை வரவிடாமல் பூனை ஒன்று தடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர் அருகில் உள்ள கபிலாஸ் பகுதியை சேர்ந்த ஒரு வீட்டை நோக்கி, நல்ல பாம்பு ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட அந்த வீட்டின் சோனி என்ற பூனை, திடுக்கிட்டது. உடனடியாக பாம்பை நோக்கி சென்ற பூனை, வாசலில் குத்த வைத்து உட்கார்ந்துகொண்டது. பாம்பு உடனே படம் எடுத்து ஆடத் தொடங்கியது. ஆனால், அசையவில்லை சோனி.
கொஞ்ச நஞ்ச நேரமல்ல. சுமார் 2 மணி நேரம் அந்தப் பூனை பாம்பை பார்த்தபடி அங்கேயே நின்று, அதை வீட்டுக்குள் விடாமல் பார்த்துக் கொண்டது. இந்நிலையில் பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் படமெடுத்துக் கொண்டிருந்த பாம்பை, லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விடுவதற்காகக் கொண்டு சென்றார்.
தனது எஜமானரின் வீட்டுக்குள் நல்ல பாம்பை விடாத சோனியின் செயலை அந்தப் பகுதியினர் சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.








