மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட ரேட்டால் எலி பேஸ்ட் விற்பனைக்கு நிரந்தர தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். சட்ட விரோதமாக யாரேனும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
ரேட்டால் என்ற வணிக பெயரில் 3% மஞ்சள் பாஸ்பரஸ் எனும் இரசாயனம் வேளாண்மை மற்றும் இதர உபயோகங்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு நிரந்தர தடை விதித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுவாக மக்கள் ரேட்டால் பேஸ்ட்டினை எலிகளைக் கட்டுப்படுத்த வீடுகளில் பயன்படுத்துகின்றனர். இதனை குழந்தைகள் பேஸ்ட் எனக்கருதி உபயோகப்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது.
இதற்கு எதிர்வினை மருந்து இல்லாததால் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதன் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதித்துள்ளது.
பொதுமக்கள் யாரும் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரேட்டால் பேஸ்ட்டினை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.
பூச்சி மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் இதர கடைகளில் விற்பனை செய்வது தெரிய வந்தால் மாவட்ட நிர்வாகம் அல்லது அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மைய பூச்சிக் கொல்லி மருந்து ஆய்வாளர்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.
மருந்து விற்பனையாளர்கள் மற்றும் இதர பூச்சி மருந்து விற்பனையாளர்கள் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற எலி பேஸ்டை விற்பனை செய்வது தெரிய வந்தால் பூச்சிக்கொல்லி மருந்து தடைச்சட்டம் 1968ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.