பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை எனக்கூறி தொடர்ந்த வழக்கை திராவிட கழக தலைவர் கி.வீரமணி வாபஸ் பெற்று கொண்டார்.
சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது தந்தை பெரியார் வெளியிட்ட கட்டுரைகளையும், கருத்துக்களையும் தொகுத்து நூல்களாக வெளியிட தந்தை பெரியார் திராவிடர் கழகம் திட்டமிட்டது. இதனை எதிர்த்து கடந்த 2008ஆம் ஆண்டு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புத்தகம் வெளியிட இடைக்கால தடை விதித்தது. பின்னர் வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி சந்துரு, தனது எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம் என்று கூறி, தடையை நீக்கி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, தனி நீதிபதி உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் கி.வீரமணி மேல்முறையீடு செய்து மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, கிருபாகரன் அமர்வு, பெரியார் யாருக்கும் காப்புரிமையை எழுதி தரவில்லை என்றும், அவருடைய எழுத்துகளும் பேச்சும் பொது தளத்திற்கு வந்துவிட்டது என்றும் கூறி தனி நீதிபதி உத்தரவில் தலையிட மறுத்துவிட்டனர்.
நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எஸ்.சுந்தர் முன்னிலையின் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திராவிட கழக தலைவர் வீரமணி சார்பில், இந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.







