மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பயப்படுவதால் தான் தமிழக அதிகாரிகளும் பயப்படுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது கடலூர் மாவட்டம்
நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வேலைவாய்ப்பு வழங்கவில்லை என சி.வி.சண்முகத்திடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், “நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த 21 கிராமங்களை சார்ந்தவர்களுக்கு, மத்திய அரசு இழப்பீடு வேலைவாய்ப்பினை இன்று வரை வழங்கவில்லை. நிலக்கரி சுரங்க நிர்வாகம் மற்றும் மத்திய அரசு இவ்விவகாரத்தில் தமிழக மக்களை வஞ்சித்து கொண்டிருக்கிறது.
புதிதாக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 300 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. தமிழர், தமிழ் மொழி என்று சொல்லி கொண்டு திரியும் ஸ்டாலின் அரசின் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இது பற்றி குரல் கொடுக்கவில்லை. இதில் மக்களை ஏமாற்றும் வேலையை ஸ்டாலின் தலைமையிலான அரசு விட்டு விட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.
இதற்காக சட்டமன்றத்தில் குழு அமைப்பதாக கூறிய ஸ்டாலின், இதுவரை குழு அமைக்கவில்லை. நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு, 2005ஆம் ஆண்டுக்கு பிறகு நெய்வேலி என்எல்சி நிர்வாகம் வேலை வாய்ப்பு வழங்கவில்லை .
தமிழ்நாடு முதலமைச்சர் பயப்படுவதால் தான் தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள். அதனால்தான், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கவலைப்படாமல், நடிகை நயன்தாரா குழந்தையை சட்டப்படி பெற்றாரா என்பது குறித்து தமிழக அரசு கவலைப்படுகிறது” என்று தெரிவித்தார்.







