கொரோனா அறிகுறி இருப்பவர்கள், அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள தயங்கக் கூடாது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் ரகுபதி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா தொற்றைக் கண்டறியும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை யை செய்துகொள்ள பொதுமக்கள் அஞ்சுவதாகத் தெரிவித்தார்.
பரிசோதனை செய்து கொண்டால் நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து குணப்படுத்திவிடலாம் என்று குறிப்பிட்ட அமைச்சர் ரகுபதி, நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதால், அவர்களுடன் பழகியவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுவதாகக் கூறினார்.
கொரோனா பரவல் அதிகரிப்புக்கு இதுதான் முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்தார். கிராமங்கள் தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ரகுபதி, தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.







