உள்ளாட்சித் தேர்தலில், தகுதியான வாக்காளர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் மாலை 5 முதல் 6 மணி என கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஈச்சாங்குப்பம் கிராம ஊராட்சியில் துணை வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதுடன், பள்ளி மாணவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி தமிழரசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், சக்திகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தகுதியான வாக்காளர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.







