“விலைவாசியை கடுமையாக உயர்த்திய மோடியின் ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்!” – கனிமொழி சோமு எம்.பி பரப்புரை!

பெட்ரோல்,  டீசல்,  கேஸ் விலையை உயர்த்தி விட்டு 10 ஆண்டு கால ஆட்சி வெறும் ட்ரைலர் தான் எனக் கூறும் மோடியின் ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என திமுகவை சேர்ந்த மாநிலங்களவை…

பெட்ரோல்,  டீசல்,  கேஸ் விலையை உயர்த்தி விட்டு 10 ஆண்டு கால ஆட்சி வெறும் ட்ரைலர் தான் எனக் கூறும் மோடியின் ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கூறியுள்ளார். 

சேலம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு ஆதரவு திரட்டி இன்று சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கனிமொழி சோமு ஆகியோர் சேலத்தில் பல்வேறு இடங்களில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.  குறிப்பாக சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி,  முள்ளுவாடி கேட்,  பொன்னம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

அப்போது கனிமொழி சோமு பேசியதாவது:

பத்தாண்டு கால மோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 500 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் அளவிற்கு இரு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டது.  கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் பெட்ரோல் , டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளதோடு விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் தமிழகத்தில் அதிக அளவில் வரி வசூலிக்கப்பட்டாலும் நம் மக்கள் செலுத்தும் ஒரு ரூபாய் வரியில் வெறும் 29 பைசா மட்டுமே நமக்கு திரும்ப கிடைக்கிறது.  ஆனால் பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் ஒரு ரூபாய்க்கு மூன்று ரூபாய் அளவில் திருப்பி வழங்கப்படுகிறது,  அதே போல பிஹார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய்க்கு ஏழு ரூபாய் அளவில் திருப்பி வழங்கப்படுகிறது.  இதனால் தமிழக உரிமை பறிக்கப்படுகிறது. எனவே கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியால் மக்கள் துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த பத்தாண்டு கால ஆட்சி வெறும் டிரைலர் தான்,  அடுத்து வரும் ஐந்து ஆண்டு கால ஆட்சி பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் ஆட்சியாக அமையும் என மோடி கூறி வருகிறார்.  ட்ரெய்லரே படுகேவலமாக இருக்கும் பொழுது,  அடுத்த ஐந்தாண்டு சினிமா படம் எப்படி இருக்கும் என மக்கள் சிந்தித்து மோடி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்.
மேலும் கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்றுள்ளது.  குறிப்பாக பெண்கள் மகிழும் வகையில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டம்,   கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்,  அதேபோல மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டம் ,  காலை சிற்றுண்டி திட்டம் போன்றவைகள் மக்கள் பயன்பெறும் திட்டங்களாக உள்ளது.  எனவே பத்தாண்டு காலம் இந்த நாட்டை சீரழித்த பாசிச மோடி அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.