விமான நிலையம் அமைப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்:விவசாயிகள்

தமிழக அரசு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எங்கள் கிராமத்திற்கே வந்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. சில பேர் மட்டும் கலந்து கொண்டதால்,இன்னொரு கூட்டம் நடத்தப்படும் என அமைச்சர்…

தமிழக அரசு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எங்கள் கிராமத்திற்கே வந்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. சில பேர் மட்டும் கலந்து கொண்டதால்,இன்னொரு கூட்டம் நடத்தப்படும் என அமைச்சர் தகவல்.

புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகனாபுரம் பகுதியில் அமைய உள்ளதாக மத்திய மாநில அரசுகள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டங்களை உள்ளடக்கிய ஏகனாபுரம், நெல்வாய், பறந்தூர், எடையார்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் ஏர்போர்ட் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. புதிய விமான நிலையம் அமைய உள்ள கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையம் வருவதற்கு எங்களுக்கு சம்மதம் தான் ஆனால் விமான நிலைய பகுதிக்கு எங்களுடைய குடியிருப்பு பகுதியோ ,விவசாய நிலங்களையோ நீர்நிலைப் பகுதிகளை எடுக்கக்கூடாது என நிபந்தனை விதித்தனர். மேலும் 75 வது ஆண்டு சுதந்திர தின கிராம சபை கூட்டத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில், விமான நிலையம் மேற்கண்ட கோரிக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று கிராம மக்கள் மற்றும் அமைச்சருடன் கருத்து கேட்டு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து காலை 10 மணி அளவில் 12 கிராம மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கூட்டரங்கிற்க்கு வருகை புரிந்தனர். 12 மணி வரை கூட்டம் துவங்காததால் கிராம முக்கியஸ்தர்கள் சில உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கிறோம், “வேண்டாம் வேண்டாம் விமான நிலையம் வேண்டாம்” என கோஷமிட்டவாரு அரங்கை விட்டு வெளியேறி சென்றனர்.

பின்னர் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வா வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் ஆகியோர் வருகை புரிந்து அவர்கள் தலைமையில் அங்கிருந்த சில விவசாயிகள் மற்றும் சில ஊராட்சி மன்ற பிரதிநிதியுடன் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரும்பாலும் விமான நிலையம் வேண்டாம் என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். சிலர் ஆதரித்து பேசினர். மேலும் மத்திய மாநில அரசுகள் விமான நிலைய அமைப்பதற்கு நிர்பந்தித்தால் விவசாய நிலத்திற்கு ஒரு சென்ட்க்கு 3 லட்சம் ரூபாயும், குடியிருப்பு பகுதிகளில் வீடுகளின் அளவை பொறுத்து 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்,வீட்டிற்கு ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஆலோசனைக்கு எடுத்துச் செல்வதாக கூறி அமைச்சர்கள் கூட்டத்தை முடித்து வெளியே வந்த அமைச்சர்கள் இன்னொரு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது அப்பொழுது செய்தியாளரை சந்திக்கிறோம் என சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றனர் .

தற்போது நடைபெற்ற இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் ஏற்கனவே புறப்பட்டு சென்றதால் சில விவசாயிகள், சில ஊராட்சி பிரதிநிதிகள் வைத்து கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வா பெருந்தகை, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா உள்ளிட்ட பொதுப்பணித்துறை, தொழில் துறை, விவசாயத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் குறித்து புறக்கணிப்பு செய்த விவசாயிகள் கூறுகையில் அரசுகள் விமான நிலையம் அமைப்பதற்கு எங்களுடைய கிராமத்திற்கு வந்து மக்களிடம் குறைகளை கேட்க வேண்டும் .ஆட்சியரோ ,அமைச்சரோ நேரில் வந்து எங்களை சந்தித்து கேட்க வேண்டும். ஒரு கிராமத்திற்கு ஐந்து பேர் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என்ன நியாயம். எனவே விமான நிலையம் அமைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இன்று நடைபெற்ற கூட்டமானது சில விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டனர். அது போலி நபர்களை வைத்து நடத்தப்பட்ட கூட்டம் என தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.