கடவு காத்த அய்யனார் கோயில் : அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்யலாம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு !

கடவு காத்த அய்யனார் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடவு காத்த அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இருக்கும் பகுதியில் பட்டியல் இன மக்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். ஆனால் பட்டியலின மக்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறும் மாசி மாத திருவிழாவின் போதும் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் உள்ளனர். இவர்கள் அனைவரும் இதுநாள் வரை கோயிலுக்கு வெளியில் நின்றுதான் சாமி கும்பிட்டு வருகின்றனர். இது குறித்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் விவேகா சுரேஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி தனபால் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அனைத்து தரப்பு மக்களும் சாமி தரிசனம் செய்ய எவ்வித தடையும் விதிக்க கூடாது, அவ்வாறு உள்ளே வந்து சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டால் உடனடியாக காவல்துறையை அணுகி உரிய பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.