பந்தநல்லூர் அருகே மயானத்திற்கு உரிய பாதை இல்லாததால், மண்ணியாற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை கிராம மக்கள் தூக்கிச் செல்லும் அவலநிலை.
தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே உள்ள நெப்பு கோவில் என்கிற நெய் குப்பை பகுதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்வதற்கு உரிய பாதை இல்லை என மக்கள் தெரிவித்தன. இதனால் மாயனத்திற்கு உடலை எடுத்து செல்ல வேண்டும் என்றால், அப்பகுதியில் செல்லும் மண்ணியாற்றை கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் மண்ணியாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் உடலை தூக்கிக்கொண்டு ஆற்றில் இறங்கி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆற்றில் தண்ணீர் இல்லாத நாட்களில் எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் மழை பெய்து, ஆற்றில் தண்ணீர் செல்லும் போது உடலை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில் நெய் குப்பையைச் சேர்ந்த மணி என்ற முதியவர் நேற்று காலமாகியுள்ளார். தற்போது மண்ணியாற்றில் தண்ணீர் செல்வதால், முதியவரின் உடலை தகனம் செய்ய உறவினர்கள் இடுப்பளவு ஆற்று தண்ணீரில் இறங்கி உடலை எடுத்துச் சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மயானத்திற்கு உரிய பாதை அமைத்து தர வேண்டுமென பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக பாலத்தின் இரு கரைகளிலும் உடலை எடுத்து செல்வதற்காக படிகளை கட்டி கொடுத்துள்ளனர்.
ஆனால் இது போன்ற மழைக்காலங்களில் பாதை இல்லாதது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சிறிய பாலத்தை கட்டி கொடுத்து இருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டிருக்காது. இது போன்று ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது ஆற்றை கடப்பது பெரும் விபத்தை ஏற்படுத்தும் எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.







