ஏன் திமுகவிடம் ஆட்சியைக் கொடுத்தோம் என்ற வருத்தத்தில் மக்கள் உள்ளனர் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் பேசியுள்ளார்.
தென்காசி மாவட்டம், இலஞ்சி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெர்றது. இதில் கலந்துகொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், அமமுகவில் நம்முடன் இருந்த சிலர் சுயநலம் காரணமாக நம்மை விட்டுச் சென்றனர். அவர்கள் கட்சியைவிட்டு சென்றது நல்லது. அவர்கள் கட்சியில் ஒரு தடை கற்கள் போல் இருந்து கொண்டிருந்தனர். அம்மாவின் கட்சியான அதிமுகவின் தற்போதைய நிலையைப் பார்த்தால் மிகவும் கவலையாக உள்ளது.
தற்போது, அதிமுகவில் உள்ளவர்கள் பழம் தின்று கொட்டையை போட்டவர்கள், அம்மாவின் ஆட்சியால் நிறைய பலன் அடைந்தவர்கள். அவர்கள் உணரும் வண்ணம் ஜனநாயக ரீதியாக நாம் தேர்தலில் வெற்றி பெற்று நம் தலைமையிலான ஆட்சியை மலரச் செய்யும்போது அவர்கள் உணர்வார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி சரியில்லாத காரணத்தினால் தான் திமுகவிடம் மக்கள் ஆட்சியை கொடுத்தார்கள். ஆனால், தற்போது ஏன் திமுகவிடம் ஆட்சியை கொடுத்தோம் என்கிற வருத்தத்தில் மக்கள் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்களின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது. பாதி தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை அவர்கள் நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
-ம.பவித்ரா








