பேனா நினைவு சின்னம்; எதிர்ப்பவர்களின் வாதம் ஏற்கக் கூடியதல்ல – கே.எஸ்.அழகிரி

வள்ளுவருக்கு குமரியில் சிலை அமைத்த கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதை எதிர்ப்பவர்களின் வாதம் எந்தவகையிலும் ஏற்கக் கூடியதல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்…

வள்ளுவருக்கு குமரியில் சிலை அமைத்த கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதை எதிர்ப்பவர்களின் வாதம் எந்தவகையிலும் ஏற்கக் கூடியதல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, மெரினா கடற்கரையில் பேனா சின்னம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, இந்த திட்டத்திற்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், “13 வயதில் அரசியலில் பிரவேசம் செய்து 95 வயது வரை தமிழ்ச் சமுதாயத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, எழுத்தாற்றல் மூலம் ஆற்றிய மகத்தான தொண்டை போற்றுகிற வகையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது. இதை உள்நோக்கத்தோடு எதிர்த்து கருத்துகள் கூறப்படுவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த ஒரு மாத காலம் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ள கடற்கரை பகுதியில் அதிகாலையில் ஆய்வு செய்து அங்கு ஆமைகளோ, மீன்களோ இல்லை என்று அறிக்கை வழங்கியிருக்கிறது. வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு 133 அடி உயரத்தில் குமரி முனையில் திருவுருவச் சிலை அமைத்த கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதை எதிர்ப்பவர்களின் வாதம் எந்தவகையிலும் ஏற்கக் கூடியதல்ல” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.