மெரினாவில் பேனா நினைவு சின்னம் : நிபந்தனைகளை விதித்தது மத்திய அரசு

வங்காள விரிகுடா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற நிபந்தனைகளை விதித்துள்ளது மத்திய அரசு.   சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.…

வங்காள விரிகுடா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற நிபந்தனைகளை விதித்துள்ளது மத்திய அரசு.

 

சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கடலுக்கு மேலே உள்ள பேனா வடிவிலான சின்னம் 42 மீட்டர் உயரத்திற்கு மேல் இருக்கும். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலையை விட கூடுதலாக சில அடி உயரம் இருக்கும்.

 

42 மீ உயரமான நினைவுச்சின்னத்திற்கு செல்ல கண்ணாடி தரையுடன் கூடிய 650 மீ நீளம், 7 மீ அகலம் கொண்ட பாலம் அமைக்கப்படவுள்ளது. கருணாநிதி தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பைக் குறிக்கும் வகையில் அவர் பயன்படுத்திய பேனாவின் வடிவத்தில் நினைவுச்சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோதும், எழுத்து மீதான அவரது ஈடுபாட்டைக் குறிக்கும் வகையில் ஒரு பேனாவும் அவரது உடலுடன் புதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நினைவுச்சின்னம் அமைப்பதற்கான தமிழ்நாடு அரசின் முன்மொழிவு தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் நிபுணர் குழுவின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, பொதுமக்களிடம் கருத்துக்கேட்டு சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்துடன், வரைவு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்க வேண்டும். பெறப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையம் மத்திய அமைச்சகத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை திருப்திகரமாக இருந்தால் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் நினைவுச்சின்னம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கும். அனுமதி வழங்கப்பட்டால் 2023-ம் ஆண்டு மே மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கவும், 2025 அக்டோபருக்குள் நினைவுச்சின்னத்தை மக்கள் பார்வைக்கு திறக்கவும் திமுக அரசு திட்டமிட்டுள்ளது.

 

-சிரில் தேவா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.