மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஜந்தர் மந்தரில் சமீபத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது பெல்லட் துப்பாக்கித் தாக்குதலுக்கு (pellet gun) ஆளானதாகக் கூறப்படும் ஒரு போராட்டக்காரரை அறிமுகப்படுத்தினார்.
அப்போது பேசிய அவர், “அவர்களில் (மாணவர்களில்) பலரும் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இங்கே என்னுடன் நிற்கும் இந்த சகோதரர், மூவர்ணக் கொடியை ஏந்தி அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்தபோது பெல்லட் துப்பாக்கித் தாக்குதலுக்கு ஆளானார்.
ஆனால் பெல்லட் துப்பாக்கிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று அரசு கூறியுள்ளது. இவரது கண் பாதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மீது தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த இளைஞரின் பார்வையைக்கூட காப்பாற்ற முடியுமா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை” என்றார்.
தொடர்ந்து அவர் போராட்டக்காரர்கள் சார்பில் மூன்று கோரிக்கைகளை முன் வைத்த அவர், “இப்போது இளைஞர்கள் மூன்று முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். முதலாவதாக, வினாத்தாள் கசிவு மற்றும் போராட்டத்திற்கு காரணமான கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, இளைஞர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளால் (pellet guns) சுட்டவர்கள் மற்றும் தடியடி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மூன்றாவதாக, பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.




