சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்ததையடுத்து லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்படைந்து மட்டுமில்லாமல் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் அவலமும் நேர்ந்தது. இந்த நிலையில் சி.ஜே.பி. அமைப்பினரும் மாணவர்களும் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.
கடந்த 20ந் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது காவல்துறை மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியதால் பலர் காயமடைந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்திய சோனம் வங்சூக் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டாலும் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்.
நீட் தேர்வே கூடாது என்பதை அறிமுக நாளில் இருந்து விசிக சொல்லி வருகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் நீட் தேர்வு தேவை இல்லை. தற்போது வினாத்தாள் கசிந்தது என்பதால் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதையே முன் நிறுத்தி போராடிக் கொண்டு இருக்கிறார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும். அதை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்துமாறு கேட்டு கொண்டோம். போராட்டம் வெற்றி பெறும் என்றும் தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் இருந்து மோடி அரசு விலக்கும் என்றும் நம்புகிறேன்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழகத்திலும் போராட தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. போராட்டம் அறவழியில் நடந்தால் ஆதரிப்பது என அரசு சொல்லி இருப்பதும் ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.
விசிக கட்சி சார்பில் வருகிற 27ந் தேதி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 234 தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடக்கும். சென்னையில் நான் பங்கேற்கிறேன். 5 நாட்களாக அவை நடக்கவில்லை. இதனால் மேகதாது அணை குறித்து பேச முடியவில்லை. அடுத்த நடக்க உள்ள கூட்டத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுக்க இருக்கிறோம். ஜனநாயகன் திரைப்படம் பார்க்கும் அளவிற்கு இப்போது நேரமில்லை. படம் வெற்றிக்கரமாக ஒடுவதாக அறிந்தேன். மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.




