அமைதிப் பேச்சுவார்த்தை: “பாகிஸ்தான் நம்பகமான மத்தியஸ்தர் அல்ல” – ஈரான் எம்.பி. விமர்சனம்…!

ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி, போர் நிறுத்தம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் பொருத்தமான நாடு இல்லை என்று கூறியுள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. மேலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப்பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் நேரடியாகப் பேச ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, மறுத்துவிட்டார். இதனால் அதிருப்தி யடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், “அமைதிப் பேச்சுவார்த்தைகளை இனி போன் காலிலேயே பேசிக்கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி, போர் நிறுத்தம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் பொருத்தமான நாடு இல்லை என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பாகிஸ்தான் நல்ல நண்பனும், அண்டை நாடும் ஆகும். ஆனால் அந்நாடு பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு பொருத்தமான மத்தியஸ்தர் அல்ல. மேலும் மத்தியஸ்தத்திற்குத் தேவையான நம்பகத்தன்மையும் அதனிடம் இல்லை.

அவர்கள் எப்போதும் டிரம்பின் நலன்களையே கருத்தில் கொள்கிறார்கள், மேலும் அவர்கள் அமெரிக்கர்களின் விருப்பங்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. உதாரணமாக, அமெரிக்கா முதலில் பாகிஸ்தானின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, பின்னர் தன் வார்த்தையை மீறிச் செயல்பட்டது என்பதை உலகிற்குச் சொல்ல அவர்கள் விரும்பவில்லை.

லெபனான் விவகாரம் அல்லது முடக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக அமெரிக்கா அளித்திருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. ஒரு மத்தியஸ்தர் நடுநிலையானவராக இருக்க வேண்டும், மாறாக ஒரு பக்கமாகச் சாய்ந்திருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.