அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்துதான் பயணம் செய்வேன் என பெண்கள் விரும்பினால், அவ்வாறு பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை உத்தரவி பிறப்பித்துள்ளதாக செய்தி வைரலாகி வரும் நிலையில், அது தவறான செய்தி என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில், அரசு நகர சாதாரணப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு எடுக்காமல் இலவசமாக, தாங்கள் செல்லும் ஊர்களுக்கு பயணம் செய்யலாம் என வாக்குறுதி அளித்திருந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்ததும் முதல் 5 திட்டங்களுக்கான கையெழுத்தில் பெண்களுக்கான இலவச பயணமும் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் அமைச்சர் பொன்முடி இலவச பயணம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இலவச பேருந்தில் செல்லும் பெண்கள் சிலர் பணம் கொடுத்து டிக்கெட் கொடுக்க வேண்டும் என நடத்துனரிடம் வாக்குவாதம் செய்யும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்துதான் பயணம் செய்வேன் என விரும்பும் பெண்கள், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி கொள்ளலாம் என போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்ததாக செய்திகள் பரவியது.
ஆனால் இந்த செய்தி தவறனாது என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
இலவச பேருந்தில் பெண்கள் டிக்கெட்டுக்கு பணம் தர விரும்பினால் பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் தரலாம் என்று போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது என பரவிய செய்தி போலி செய்தி என குறிப்பிட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்








