ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது வீட்டு பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோகியா நேற்று ஜம்முவின் புறநகர் பகுதியில் உள்ள தமது இல்லத்தில் மர்மமான முறையில் சடலமாக காணப்பட்டார். அவர் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. மேலும் உடலில் தீக் காயங்களும் இருந்தன.
மாநிலத்தின் சிறைத்துறை டிஜிபியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டது ஐம்முகாஷ்மீரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த படுகொலை குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் ஹேமந்த் குமார் லோகியாவின் வீட்டு பணியாளர் யாசிர் லோகர் மீது சந்தேகம் ஏற்பட்டது. படுகொலை நடந்தபோது வீட்டிலிருந்து பதற்றமாக அவர் வெளியேறியது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கான்சாசாக் என்கிற இடத்தில் பதுங்கியிருந்த யாசிர் லோகரை கைது செய்தனர். சமீபகாலமாக அவர் மூர்க்கத்தனமாக பிறரிடம் நடந்துகொண்டு வந்ததும், அதிக மன உளைச்சலில் இருந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த படுகொலைக்கு லஷ்கர்-இ-தொய்பா பிஏஎஃப்எஃப் என்கிற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அதனை ஜம்மு காஷ்மீர் போலீசார் மறுத்துள்ளனர். தற்போதைய விசாரணை அடிப்படையில், டிஜிபி ஹேமந்த் குமார் லோகியா கொலைக்கு பின்னால் தீவிரவாத சதிச் செயல் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் தென்படவில்லை என கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்முகாஷ்மீருக்கு பயணித்துள்ள நேரத்தில் அம்மாநில காவல்துறை உயர் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







