குருவை தூக்கி கொண்டாடும் விசயத்தில் யாரும் தலையிடக்கூடாது என்றும் கண்டிப்பாக பட்டினபிரவேஷ நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், பட்டின பிரவேசம் செய்ய தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது மனவேதனை அளிப்பதாக கூறினார். ஆதீனங்கள் விஷயத்திலும், மடாதிபதிகள் விஷயத்திலும், கோயில் விஷயத்திலும் யாரும் தலையிடுவதும், இதை செய்யக்கூடாது, அதை செய்யக்கூடாது என்று அதிகாரம் செலுத்தவும் கூடாது என்று எச்சரித்தார்.
பட்டினப்பிரவேசம் சம்மந்தமாக ஆதீனங்களின் மடாதிபதிகள் முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்த அவர், தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், இதுபோன்று ஆன்மீக விஷயத்தில் தலையிடுவதால் அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகி வருவதாகவும் கூறினார்.
உறுதியாக தமிழ்நாடு அரசு இதை ஏற்றுக்கொண்டு பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம், குருவை தூக்கி கொண்டாடும் விசயம் இது. இதில் யாரும் தலையிடக்கூடாது கண்டிப்பாக நடத்தியே தீருவோம் என்றார். செண்டலங்கார ஜீயர் அமைச்சர்களை நடமாட முடியாது எனக் கூறியது அது அவருடைய சொந்தக் கருத்து என தெரிவித்த சடகோப ராமானுஜ ஜீயர், மதுரை ஆதீனம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பது குறித்து தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்து பாதுகாப்பு கேட்டு முறையிடுவோம் என்றார்.
திமுகவுக்கு அவர்களுடன் இருக்கும் சில கருப்பு புள்ளிகளால் கெட்ட பெயர் ஏற்படுகிறது. தோளில் சுமப்பது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்றால், கிரிக்கெட் வீரர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றவுடன் அவர்கைள தோளில் தூக்கி சென்று சுமக்கிறார்கள். அதற்கு எதிர்ப்புகள் வருவதில்லை ஆனால் மத விவகாரங்களில் மட்டும் இதை செய்ய வேண்டும். அதை செய்ய கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.







