ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். அந்த அமைப்பு பல்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டு இயங்கி வருகிறது. பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் முஹம்மத் ஷேக் அன்சாரி, “ஆளுநர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்து தவறான கருத்துகளை தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் மக்களுக்காக சேவையில் முதன்மையாக இருந்தது எங்கள் அமைப்பு. வன்மமான அரசியல் நோக்கத்துடன், தமிழக மக்கள் உணர்வை புண்படுத்தும் நோக்கத்தில் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்” என்று தெரிவித்தார்.
அவருடைய நடவடிக்கைகள் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறைகளை பின்பற்றி அமைந்திருக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், நாளை மாலை 4 மணிக்கு ஆளுநர் முற்றுகை போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம் என அறிவித்தார்.
மேலும், “ஆளுநர் தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். நேர்மையான முறையில் செயல்பட வேண்டும், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கான வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு ஜனநாயக முறையில் நேர்மையான முறையில் எதிர்வினையாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.







