உலக அரங்கில் ஜொலிக்குமா இரவின் நிழல்

உலகின் முதல் Non linear சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்பட்டுள்ள இரவின் நிழல் திரைப்படம் எப்படி உள்ளது – விமர்சனம் தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் பார்த்திபன் முக்கியமானவர். அப்படி அவரது முயற்சியில்…

உலகின் முதல் Non linear சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்பட்டுள்ள இரவின் நிழல் திரைப்படம் எப்படி உள்ளது – விமர்சனம்

தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் பார்த்திபன் முக்கியமானவர். அப்படி அவரது முயற்சியில் வெளியான பல படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்பு பார்த்திபன் நடித்து, இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் அப்படி ஒரு முயற்சி தான். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் பார்த்திபன். இரவின் நிழல் என்ற புதிய படத்தை நடித்து, இயக்கியுள்ளார் பார்த்திபன். உலகின் முதல் Non linear சிங்கிள் ஷாட் திரைப்படமாக இரவின் நிழல் உருவாகியுள்ளது.

உலக சினிமா வரலாற்றில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் உள்ளன. அதென்ன சிங்கிள் ஷாட் ? ஒரு முறை படப்பிடிப்பு தொடங்கி, கேமராவை ஆன் செய்து விட்டால் படம் முழுவதையும் எடுத்து முடித்துவிட்டுத்தான் கேமராவை நிறுத்த வேண்டும். அது சில நிமிடங்களானாலும் சரி, பல மணி நேரமாக இருந்தாலும் சரி. இப்படி எடுக்கப்படும் படங்கள் தான் சிங்கிள் ஷாட் திரைப்படங்கள் ஆகும். இதை ஒன் ஷாட் சினிமா, சிங்கிள் டேக் ஃபிலிம் என்றும் சொல்லலாம். இது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. படப்பிடிப்பின்போது ஒரு சிறிய தவறு நடந்து விட்டால் கூட மறுபடியும் முதலிலிருந்து படப்பிடிப்பை நடத்தவேண்டி இருக்கும். எனவே மிக மிகக் கவனமாக மேற்கொள்ளவேண்டிய ஒரு உத்தியாகவே இந்த சிங்கிள் ஷாட் சினிமா உள்ளது.

மேக்பத், பிக் மன்டே, டைம்கோட் என பல படங்கள் சிங்கிள் ஷாட் படமாக வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து மட்டும் 5 படங்கள் சிங்கிள் ஷாட் படமாக வெளியாகி உள்ளது. ஆனால் தற்போது பார்த்திபன் எடுத்துள்ள இரவின் நிழல் உலகின் முதல் Non linear சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

நேரடியாக ஒரு கதையை விவரிக்காமல் பல்வேறு கோணங்களில் கதையை நகர்த்தி செல்லும் ஒரு யுக்தி தான் Non linear முறை. இதனை அடிப்படையாக கொண்டு தான் இரவில் நிழல் எடுக்கப்பட்டுள்ளது. முதல் 30 நிமிடங்கள் படத்தின் மேக்கிங் வீடியோ திரையிடப்படுகிறது. அதாவது எப்படி சிங்கிள் ஷாட்டில் அதிலும் Non linear முறையில் முழு திரைப்படமும் எடுக்க முடிந்தது, அதற்கு பின்னால் இருக்கும் படக்குழுவினரின் உழைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த படத்திற்காக 64 ஏக்கரில் 50 க்கும் மேற்பட்ட அரங்குகளில் செட் அமைக்கப்பட்டு 90 நாட்கள் ஒத்திகை பார்க்கப்பட்டு தற்போது உலகின் முதல் Non linear சிங்கிள் ஷாட் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. சில நிமிட காட்சிகள் கூட பல முறை எடிட் செய்து தான் திரையில் வெளியாகும் நிலையில் முழு திரைப்படமும் எந்த ஒரு எடிட்டும் செய்யாமல் எடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அப்படி எடுக்க வேண்டும் என்றால் எத்தனை முறை ரிகர்சல் செய்திருக்க வேண்டும். அதே நேரத்தில் பல முறை ரிகர்சல் செய்தாலும் கேமராவின் ஃபோகஸ், விலங்குகளை கையால்வது, லைட்டிங் என எதாவது ஒரு சிறிய தவறு நடப்பது இயல்பு.

அப்படி இரவின் நிழல் படபிடிப்பு தொடங்கி 7வது நிமிடம், 18 வது நிமிடம், 36 வது நிமிடம் என 22 முறை தவறு நடந்து மீண்டும் முதலில் இருந்து படபிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. 96 நிமிடங்கள் உள்ள படத்தில் 93வது நிமிடத்தில் ஏற்பட்ட ஒரு சிறிய தவறு காரணமாக மீண்டும் முதலில் இருந்து படபிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. வெறும் 3 நிமிட காட்சிகளுக்காக மீண்டும் முதலில் இருந்து படபிடிப்பு நடத்தது. எவ்வளவு சோர்வுகள் இருந்தாலும் அதை எல்லாம் கேமரா முன்பு காட்டிக்கொள்ளாமல் படபிடிப்பை நிறைவு செய்த படகுழுவின் கடின உழைப்பே இரவின் நிழல் படத்தில் வெளிப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கதையை பொறுத்தவரை முறையற்ற உறவில் பிறந்த ஒருவர் 50 வயது வரை தான் செய்த பாவங்களையும் அந்த குற்ற உணர்வு காரணமாக ஏற்படும் பாதிப்புகளையும் திரும்பி பார்க்கும் வாழ்க்கை பயணம் தான் இரவின் நிழல் திரைப்படத்தின் கதை. நந்து என்கிற சினிமா பைனான்சியர் கதாப்பாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார். அவருடன் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிதா, பிரியங்கா ரூத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பார்த்திபனின் எழுத்தும், இயக்கமும் எந்த அளவிற்கு இப்படத்திற்கு பலமாக உள்ளதோ அதே அளவிற்கு ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசையும், ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவும் கூடுதல் பலமாக உள்ளது. பெண் குழந்தைகளை போலவே ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் இந்த சமூகத்தில் நடக்கிறது என்பதை இந்த படம் பதிவு செய்துள்ளது. ஆனால் அதை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் நாம் செய்யும் பாவங்களுக்கும், குற்றங்களுக்கும் நம்முடைய குற்ற உணர்வுகளே நமக்கான தண்டனையை கொடுத்துவிடும் என்பதை இந்த படம் அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

இதற்கு முன்பு வெளியான ஆர்ஆர்ஆர், புஷ்பா, பாகுபலி போன்ற திரைப்படங்கள் அந்த படத்தின் பிரம்மாண்டம் மற்றும் மேக்கிங்கிற்காக கொண்டாடப்பட்டது. அதை போலவே இரவின் நிழல் படமும் பல்வேறு சோதனைகளை கடந்து பல தடைகளை தாண்டி உலகின் முதல் Non linear சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட புதிய முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே தமிழ் சினிமாவின் தரம் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

– தினேஷ் உதய்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.