ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட முதல் வண்ணப் படத்தை நாசா நேற்று வெளியிட்டது. ஆச்சரியப்படுத்தும் புகைப்படமான இதனை கூகுள் தனது இணையதள லோகாவாக வைத்து பெருமைப்படுத்தியுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஜேம்ஸ் வெப் என்ற தொலை நோக்கியை கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி விண்ணில் ஏவியது. ‘விண்வெளியில் உள்ள புவியின் கண்’ என்று வர்ணிக்கப்படும் ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் ஆயுள் முடிவை நெருங்கி வரும் நிலையில், ஜேம்ஸ் வெப் அதன் வாரிசாக இருக்கும் என்று சொல்லப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய மதிப்பில் சுமார் ரூ.75 ஆயிரம் கோடி செலவில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், விண்வெளியில் ஜேம்ஸ் வெப் எடுத்த முதல் முழு வண்ணப் புகைப்படம் ஒன்றை நாசா நேற்று வெளியிட்டுள்ளது. இதையடுத்து, இணையவாசிகள் இந்த புகைப்படத்தை ஆச்சரியத்தோடு பகிர்ந்து வந்தனர்.
இப்படி பேரண்டத்தை காட்சிப்படுத்தி இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் இதுவரை இல்லாத அளவு ஆழத்தோடும், தெளிவோடும் அமைந்திருப்பதுதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட முதல் படத்தின் சிறப்பு என நாசா தெரிவித்துள்ளது.
பெரு வெடிப்பின் மூலமாக 13.8 பில்லியன் (1380 கோடி) ஆண்டுகள் முன்பு இந்தப் பேரண்டம் உருவானது என்று கணிக்கிறார்கள் அறிவியலாளர்கள். பிறந்து 600 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே ஆனபோது பேரண்டத்தின் குறிப்பிட்ட பகுதி எப்படி இருந்தது என்பதைத்தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் படம் காட்டுகிறது.
இந்நிலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுத்த புகைப்படத்தை கூகுள் நிறுவனம் தனது லோகோவாக வைத்து பெருமைப்படுத்தியுள்ளது. கூகுள் வலைதள தேடல் பக்கத்தில் கூகுள் என்ற வார்த்தைக்கு நடுவே ஜேம்ஸ் வெப் எடுத்த புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
பொதுவாக சிறப்பு வாய்ந்த நாட்கள் மற்றும் மாமனிதர்களை நினைவுப்படுத்தும் வகையில் கூகுள் லோகோ அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் சம்மந்தப்பட்ட புகைப்படத்தை தனது லோகோவாக வைத்து கூகுள் நிறுவனம் பெருமை சேர்த்து வருகிறது. அந்த வரிசையில் ஜேம்ஸ் வெப் எடுத்த முதல் வண்ண புகைப்படம் இன்று கூகுள் லோகோவாக இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்