நாடாளுமன்ற தேர்தல்: பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் – சசிதரூர் பேட்டி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு கடும் போட்டியை வழங்க காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என சென்னையில் சசி தரூர் தெரிவித்துள்ளார்.   அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு…

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு கடும் போட்டியை வழங்க காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என சென்னையில் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் ஆதரவை திரட்ட சென்னை வந்துள்ளார். அப்போது, சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் காந்தி சிலைக்கும் மரியாதை செலுத்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் மூலம் மக்களுக்கு காங்கிரஸ் மீது மீண்டும் ஈர்பு ஏற்படுத்துவது போன்று இந்த தேர்தல் அமைய வேண்டும் என நிர்வாகிகளுக்கு கேட்டுக்கொண்டார்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேச அழைப்பு தெரிவித்துள்ளேன். யாருக்கெல்லாம் விருப்பம் உள்ளதோ அவர்கள் வரலாம் என கூறினார். தானும் மல்லிகார்ஜுன கார்கேயும் எதிரிகள் அல்ல. நாங்கள் நண்பர்கள். இருவரும் இணைந்து தேர்தல்களில் பணி செய்துள்ளோம் என விளக்கமளித்தார்.

பாஜகவால் சந்திக்கும் சவால்களில் இருந்து காங்கிரஸ் கட்சியை எவ்வாறு முன்னோக்கி எடுத்து செல்வது என்பது குறித்து கட்சிக்குள் இருக்கும் நண்பர்கள்
செய்துகொள்ளும் விவாதமே இந்த தேர்தல் போட்டி என்பதை மறந்து விடக்கூடாது என்றார். பாஜக இரண்டு தேர்தல்களில் வென்று விட்டது. மூன்றாவது தேர்தலையும் அவர்கள் வெற்றி பெற விடக்கூடாது. அவர்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த வேண்டும். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என சசிதரூர் தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.