தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் முன்னாள் காவல் அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 பேர் பலியாகினர்.
தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான நோங் புவா லாம்புவில் உள்ள உதாய் சவான் நகரில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு சென்ற மர்ம நபர் ஒருவர், திடீரென குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் வேலை செய்யும் பணியாளர்கள், மற்றும் ஆரிசியர்களை சுட்டு கொன்றார். தொடர்ந்து அந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில், குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் உள்ள 22 குழந்தைகளையும் சுட்டு வீழ்த்திவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தாய்லாந்து பிரதமர் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அப்பகுதியை முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் முன்னாள் போலீஸ் அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது. மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்ற அவர், வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான காரணங்களுக்காக அவர் போலீஸ் பணியில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







