நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த விவரஙகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன.
மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என அரசியல் வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.
குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதிசெய்து, தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான INDIA – கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை குறித்த தற்போதைய நிலவரம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 96.88 கோடியாகும். இவற்றில் ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் , முதல்முறை வாக்காளர்கள் என பட்டியல் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரங்களை விரிவாக காணலாம்.
- மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை : 96,88,21,926 பேர்
- ஆண்கள் – 49,72,31,994
- பெண்கள் – 47,15,41,888
- மூன்றாம் பாலினத்தவர்கள் – 48,044
- மாற்றுத்திறனாளிகள் – 88,35,449
- 18 – 19 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்கள் – 1,84,81,610
- 20 – 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் – 19,74,37,160
- 80 வயதுக்கு மேற்பட்டோர் – 1,85,92,918
- 100 வயதுக்கு மேற்பட்டோர் – 2,38,791







