அதானி குழும மோசடி தொடர்பாக கூட்டு நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பொன்னேரி மாதவரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திரைப்பட பாடகி வாணி ஜெயராம், திரைப்பட நகைச்சுவை நடிகர் மயில்சாமி ஆகியோர் மறைவுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதானி குழுமம் சார்பாக அறிக்கை வெளியாகி உள்ளது. அதானி குடும்பத்தின் சட்ட விரோத நடவடிக்கை பங்கு மதிப்புகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. பங்குச் சந்தையில் மோசடி வேலைகள் நடந்தது. கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் செயல்கள் நடந்தது. செயற்கையாக பங்குகள் விலையை அதிகப்படுத்தி உள்ளனர்.
இந்த விஷயம் வெளிவந்தபிறகு பங்குச் சந்தையை நிர்வகிக்கும் செபி, ரிசர்வ் வங்கி போன்றவையும் இதில் தலையிடவில்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையான கூட்டு நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக அரசு நிராகரித்துவிட்டது. உச்ச நீதிமன்றம் நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று கூறி உத்தரவு போட்டுள்ளது. நிபுணர் குழு பங்குச்சந்தை பிரச்சனை காரணமாக முதலீடு செய்துள்ள சிறு முதலீட்டாளர்களை பாதுகாப்பது குறித்த நடவடிக்கை எடுப்பதற்காக மட்டுமே கமிட்டி போடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இரண்டு பங்கு சந்தை மோசடி சம்பவங்களில் கூட்டு நாடாளுமன்ற குழு மூலம் விசாரணை நடந்துள்ளது. இதுபோன்று அதானி குழும விவகாரத்திலும் நடக்க வேண்டும்.
திரிபுரா மாநிலத்தில் வாக்குப்பதிவுக்கு பின்னர், தொடர்ந்து ஆளும் பாஜக மூலம் எதிர்க்கட்சிகள் மீது பல்வேறு தாக்குதல் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் வருகிற வரை, தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் அங்கு உள்ளது. தவறு செய்பவர்களை தேர்தல் ஆணையம் கைது செய்ய வேண்டும்.
அண்மைச் செய்தி: ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் – மீத்தேன் ஜெயராமன் ஆட்சியரிடம் மனு
ஆளுங்கட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்ட தடைகளை தாண்டி மக்கள் வாக்களித்துள்ளார்கள். வாக்காளர்கள் தைரியமாக வாக்களித்துள்ளனர். பிஜேபிக்கு எதிராக வாக்குகள் சென்று இருக்கும் என சந்தேகம் அவர்களுக்கு உள்ளதால் எதிர்க்கட்சிகள் மீது அவர்களின் தாக்குதல் தொடர்கிறது. தமிழ் உள்ளிட்ட இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் வழக்காடு மொழியாக அந்தந்த மாநிலங்களில் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பிரகாஷ் காரத் தெரிவித்தார்.







