இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலமாக கர்நாடகா மாறும் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் இரண்டரை மாதங்கள் மட்டுமே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள பொது கூட்டங்கள், பேரணிகள், யாத்திரைகளை என நடத்தி வருகின்றன.
இதில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். அதன்படி, சமீபத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கர்நாடகாவின் உடுப்பிக்கு இன்று வருகை தந்தார். அவர் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி ரூ.33,000 கோடிக்கான திட்டங்களை கர்நாடகாவிற்கு வழங்கினார். இதன் மூலம் கர்நாடகா இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக மாறப்போகிறது என்று கூறினார்.
இன்று இந்தியாவில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் குடும்ப கட்சிகளே.
காங்கிரஸ், எஸ்பி, ஆர்ஜேடி, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர்சிபி, டிஆர்எஸ், பிஆர்எஸ் மற்றும் திமுக என அனைத்தும் குடும்பக் கட்சிகளே என்று குறிப்பிட்டார்.
பாஜகவின் வரலாற்றில் உடுப்பிக்கு தனி இடம் கிடைத்துள்ளது. ஏனென்றால் கடந்த 1968ம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பாஜக முதன் முதலில் வெற்றி பெற்றது. அந்த நேரத்தில் கிடைத்த வெற்றி தான் தென்னிந்தியாவில் பாஜகவிற்கான நுழைவாயிலாக அமைந்தது என்று தெரிவித்தார்.
உக்ரைன்-ரஷ்யா போர் நடைபெற்று கொண்டிருக்கும் போது போரை நிறுத்தி தனது நாட்டு மக்களை வெளியேற்றி பிரதமர் யாராவது இருக்கிறார்களா? ஒரே நேரத்தில் இரு நாட்டு அதிபர்களுடனும் பிரதமர் மோடி பேசி 22,500 இந்திய மாணவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொலைக்காட்சியில் நாம் பார்க்கிறோம். அவர் இன்னும் முககவசம் அணிந்து கொண்டு தான் இருக்கிறார். அமெரிக்காவில் இதுவரை 76% கொரோனா தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் தற்போது யாரும் முககவசம் அணிவதில்லை. இங்கு கொரோனா தடுப்பூசி முழுவதும் போடப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் ஒன்றாக முககவசம் இல்லாமல் பழக முடிகிறது.







