ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் அடிமை ஆகாமல், பெற்றோர் அவர்களிடம் நேரத்தை செலவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
செல்போன், கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளையாட்டுக்களை தடை செய்யக்கோரி, மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
ஆன்லைன் விளையாட்டுக்களால் குழந்தைகளும், இளம் பருவத்தினரும், மாணவர்களும் விளையாட்டுகளில் உள்ள கதாப்பாத்திரங்களாக மாறிவிடுவதுடன், வன்முறை எண்ணங்களுக்கும் ஆளவதாக மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், பலரும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர் எனவும், அதேசமயம் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிடுவது குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமை ஆகாமல் மத்திய, மாநில அரசுகள்தான் தடுக்க முடியும் என்று கூறிய நீதிபதிகள், செல்போன், ஆன்லைன் விளையாட்டுகளால் பெற்றோர் மற்றும் பெரியோரிடம் கூட குழந்தைகள் பேசுவது குறைந்து வருவதாக கவலை தெரிவித்ததுடன், தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செலவழித்து சுய ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.







