விருதுநகர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளியாக பிறந்த குழந்தையை பெற்றோர் மருத்துவமனையிலேயே விட்டுச்சென்ற கொடுமை அரங்கேறியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரை சேர்ந்தவர் சங்கிலி. இவரது மனைவி சுப்புலட்சுமிக்கு கடந்த 8ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. முதலில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்த செவிலியர்கள், பின்னர் சில உடல் நலக் குறையுடன் பெண் குழந்தை பிறந்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையை செவிலியர்கள் மாற்றிவிட்டதாக, சங்கிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகம், டிஎன்ஏ பரிசோதனை மூலம் மாற்றுத் திறனாளியாக பிறந்த பெண் குழந்தை, சுப்புலட்சுமியுடையது தான் என்பதை உறுதிசெய்தனர். இதையடுத்து குறைபாடுள்ள குழந்தையை ஏற்க மறுத்த சங்கிலி மற்றும் சுப்புலட்சுமி தம்பதியினர் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச்சென்றனர். இதையடுத்து சட்ட நடவடிக்கைகளுக்குட்பட்டு அந்த குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.








