“தான் உண்டு தன் வேல உண்டுன்னு இருக்குற ஒருத்தனோட சமநில தவறினா, அவனோட கோவம் எப்படி இருக்கும்னு காட்டுவேன்” என்ற வலிமை திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான திரைப்படங்கள், சில காட்சி ரீதியாகவும், கதை ரீதியாகவும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் சமீபமாக வெளியான சாணி காயிதம், நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் இருந்து பராசக்தி வரை சாதி ஆணவத்தை தோலுரித்த திரைப்படங்களையும், அவை ஏற்படுத்திய தாக்கத்தையும் எடுத்துரைக்கும் சிறிய முயற்சியே பின்வரும் கட்டுரை..
“பழி வாங்குறதுன்னா என்னனு தெரியுமா?, ஒருத்தன் நம்மல கல்லால அடிச்சா, நம்ம பதிலுக்கு கல்லால அடிக்கணும், ஒருத்தன் நம்ம மேல எச்சி துப்புனா நாமலும் பதிலுக்கு அவங்க மேல எச்சி துப்பனும். நம்ம கனவு, உசுரு, ஆச உலகம்ன்னு ஒருத்தன் நம்ம வாழ்க்கையையே அழிச்சிட்டா, அவன தூக்கி ஜெயில்ல போட்டா.. அதுக்கு பேரு பழி வாங்கறதா?? இல்ல.. என் புருசன், குழந்த சாகும் போது என்ன வலி அனுபவச்சாங்களோ அதே வலி அவங்களும் அனுபவிக்கணும், கொல்லணும், குத்தி குத்தி கொல்லணும், வெட்டணும், துண்டு துண்டா என் கையால வெட்டணும்!” என பொன்னி(கீர்த்தி சுரேஷ்) ரத்தம் கொதிக்க பேசும் வசனங்களே அடுத்த 2 மணிநேரத்திற்கு ஆடியன்ஸை கட்டிப்போட தயாரானது.
பொன்னியின் vengeance பசிக்கு தீணிபோட அவளுடன் கைக்கோர்க்கும் அண்ணன் செங்கையன்(செல்வராகவன்) ‘எனக்கும் அதான் தோணுது, வா அவனுங்கள கண்டு புடிச்சி வெட்டலாம், வா பொன்னி வா…!’ என்று கூறி விதவிதமான ஆயுதங்களுடன் இருவரும் வண்டியேறி கிளம்பும் காட்சியிலிருந்து திரைக்கதை தீப்பிடிக்க தொடங்குகிறது.
புதுப்பேட்டை, 7ஜி ரயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், காதல் கொண்டேன், மயக்கம் என்ன போன்ற படங்களின் மூலம் இயக்குநராக நமக்கு விருந்து வைத்து தமிழ்சினிமாவின் ஜீனியஸாக வலம் வந்த செல்வராகவன் ஒரு நடிகனாக அவதாரம் எடுத்த முதல் திரைப்படம் தான் சாணிக்காயிதம்.(பீஸ்ட்-க்கு முன்பே சாணி காயிதம் படம் தியாராகிவிட்டது). நடிகையர் திலகத்தில் கிளாஸிக் அவதாரம் எடுத்து நம் மனம்கவர்ந்த கீர்த்தி இப்படத்தில் முதுகில் அரிவாளையும் இடுப்பில் துப்பாக்கியையும் சொருகிக்கொண்டு ஆக்ஷன் கில்லராக வந்து வெளுத்து வாங்குகிறார்.
ராக்கி என்ற திரைப்படத்தின் மூலம் பழி வாங்கும்(vengeance) கதையை கொடூரமாக காட்டிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் அதேபோலான பழிக்கு பழிக்கு ரத்தத்திற்கு ரத்தம் என சாணி காயிதத்தில் அடுத்த அத்தியாத்தை எடுத்திருக்கிறார். 2022ல் ஓடிடி தளத்தில் வெளியான சாணி காயிதத்தின் கதை உண்மையில் 1989 ஆண்டு, அதாவது 80களில் நடந்த சம்வமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. வீடுவீடாக சிலிண்டர் போடும் சாதாரண வேலைக்காரன், ரைஸ் மில்லில் வேலை பார்க்கும் கணவனின் மனைவியாக இருக்கும் கான்ஸ்டபில் கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் வாழ்க்கையில் ஆதிக்க சாதியினர் இழைக்கும் அநீதிகள் குறித்து சித்தரக்கிறது இப்படம். கணவனும் பிள்ளையும் உயிருடன் கொளுத்தி கொலை செய்து தன்னையும் தன் வாழ்வையும் சிதைத்த குரூரர்களின் இறுப்பிடங்களை கீழே கிடக்கும் ஒரு சாணி காயிதத்தில் எழுதிக்கொண்டு அவர்களை தேடிக்கண்டுபிடித்த பழிதீர்க்கும் சாதாரண கதையானாலும் திரைக்கதையில் மிரட்டுகிறார் இயக்குநர்.
மிகவும் கொடூரமான காட்சிகளுடன் ரத்தம் தெறிக்க தெறிக்க கொலை செய்து பழிவாங்கும் காட்சிகள் இருந்தாலும், படத்தின் மையக்கருவான சாதிய ஒடுக்குமுறையும், அதை எதிர்த்து போராடும் பொன்னி மற்றும் சங்கையாவின் கதாப்பாத்திர வடிவமைப்பும், ஆதிக்க சாதியினரால் இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி தீர்க்கும் பெண்ணை மையப்படுத்திய திரைக்கதை அமைப்புமே படத்தை முக்கிய விவாதப்பொருள் ஆக்கியது.
சாணி காயிதம் திரைப்படக் கதை ஒரு கற்பனை கதையாகவே இருந்தாலும், சாதிப் பெருமை பேசும் ஆதிக்க வர்க்கத்தினரின் கொடுமைகளை படம் பிடித்து காட்டியுள்ளது என்கின்றனர் சினிமாவை அறிந்தவர்கள்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சமூகநீதி கருத்துக்களானது 1950களில் கருணாநிதியின் பராசக்தி தொடங்கி அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு அதனுடைய தாக்கம் தொடர்ந்தது. காதல் படத்தில் கூட போகிற போக்கில் சமூகநீதிக்கான வசனங்களை சொருகுவதன் மூலம் அதன் நடிகர்களும் இயக்குநர்களும் மக்களிடையே கைத்தட்டல்களை வாங்கினர். அதனைத்தொடர்ந்து 80கள் மற்றும் 90கள் வரை சாதி பிரச்னை சம்பந்தமாக சில படங்கள் வெளிவந்திருந்தாலும் அவை அனைத்தும் சாதிப்பெருமையை பேசுபவையாகவும், ஒரு பிரிவினருக்குள்ளேயே ஏற்படும் மோதல்களை காட்டக்கூடியவையாகவே அமைந்தது. அந்த வரிசையில் வெளியான சின்ன கவுண்டர், தேவர் மகன், நாட்டாமை, விருமாண்டி போன்ற திரைப்படங்கள் சாதிப்பெருமையை நேரடியாகவோ மறைமுகமாகவோ தூக்கிப்பிடிக்கவே செய்தன என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்து. பாரதிராஜா இயக்கத்தில் 1985ல் வெளியான முதல் மரியாதை திரைப்படம், ஒரு புள்ளியில் சாதி பெருமையையும், மறு புள்ளியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் பேசியது. இதற்கிடையில் 1999ம் ஆண்டு வெளியான இரணியன் திரைப்படம் சாதிய அடக்குமுறையை போராட்ட குணத்துடன் காட்சி படுத்தியது.

வேதம் புதிது படத்தில் ‘பாலு’ங்குறந்து உங்க பேரு, பின்னாடி இருக்குற தேவர் நீங்க படிச்சி வாங்குன பட்டமா? சாதி இல்ல சாதி இல்லன்னு சொல்லுற நீங்களே பாலுத்தேவர் பரம்பர, பாலுத்தேவர் பரம்பரன்னு சொல்லிட்டு இருக்கேளே என்று சத்தியராஜை பார்த்து பேசும் சிறுவன், நான் கரையேறிட்டேன், நீங்க இன்னும் கரையேறாமலேயே நிக்கிறீங்களே என்று கேட்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இத்தகைய காட்சிகள் மூலம் சாதி ஒழிப்பை பேசிக்கொண்டு, சாதிப்பெருமையுடன் இருக்கும் மக்களின் மனநிலையை பாரதிராஜா உணர்த்தியிருப்பார். ஆனால் அதே பாரதிராஜாவின் முதல்மரியாதை படத்தில் ஜாதி பெருமையை பேசியிபடி சிவாஜி அரிவாளை உருவும் காட்சியையும் ரொமாண்டிசைஸ் செய்து காட்டியிருப்பார்கள். இப்படி சாதிய ஒடுக்குமுறைகளை வெளிக்கொணர்ந்த தமிழ் திரைப்படங்கள், விரல் விட்டு எண்ணக்கூடியவையாகவும், அப்படியே வந்தாலும் முழு சித்தாந்த அரசியல் புரிதலற்ற அரைவேக்காட்டு தனமாகவும் அமைந்ததாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு.
இந்நிலையில் பா.ரஞ்சித்தின் அசுரத்தனமான முன்னெடுப்புகளால் சாதிக்கெதிரான சமூகநீதிப்படங்களுக்கென புதிய மார்கெட்டே உருவானது. கலைத்தன்மையுடன் அடுக்குமுறைக்கு எதிராக அவர் மேற்கொண்ட கலை முயற்சியின் ரூட்டை பிடித்து அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வெளிவந்தன. கடந்த 2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம்தான் ஆதிக்க சாதியினரின் வன்மத்தையும், பட்டியலினத்தவர்கள் அவர்களை இழிவாக நடத்துவதையும் தத்ரூபமாக காட்டியதில் முக்கிய படமாக அமைந்தது.
முதல் காட்சியிலேயே தேவையற்ற வம்பு சண்டைகள் வேண்டாம் என்று ஒதுங்கி போவதையும், வீனாக ஆதிக்க வர்க்கத்தினர் வம்பிழுப்பதும் சாதாரண காட்சி மூலம் காட்டியிருப்பார் மாரி செல்வராஜ். தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை முறை என்ன, அவர்களின் தேவை என்ன?, மற்றவர்களால் அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என அனைத்தையும் காட்சி மூலம் விவரித்திருப்பார் இயக்குநர். ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல அவர்கள் வளர்க்கும் நாயைக் கூட சாதியின் கோரமுகம் எப்படி கடித்துக்குதறுகிறது என்பதை அதே வலியுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
கல்லூரி காலம் முழுவதும் தன்னை துன்புருத்திய ஜோவின் வீட்டாருடன் பெருமாள் நடந்துகொள்ளும் விதமே சமுதாய கருத்தை எதிரொலித்திருக்கும். அந்த காட்சியின்போது பேசும் ஜோதியின் அப்பா, தம்பி நா உண்ட ஒன்னு கேப்பேன் மறைக்காம சொல்லனும்.. நாங்க உனக்கு இவ்ளோ பண்ணிருக்கோம்ல, அது எதயுமே நீ ஏன் என் போன்னுட்ட சொல்லல?? என்றவுடன் உங்களுக்கு ஒன்னு தெரியுமா சார், உங்க பொண்ணுக்கு என்னவுட உங்களதான் ரொம்ப புடிக்கும். எப்பவுமே நான் ரொம்ப லக்கி, எங்க அப்பா ரொம்ப நல்லவருன்னே ஜோ சொல்லிட்டு இருப்பா சார்” என்று உறுக்கமாகவும் உணர்ச்சிகரமாகவும் சொல்வான் பெருமாள். இப்படியாக நகரும் காட்சியில் தொடர்ந்து பேசும் தந்தை, “தம்பி என் பொண்ணு உன் மேல இவ்ளோ பைத்தியமா இருக்காளே உனக்கு அவ மேல எந்த எண்ணமும் வரலயா என்றவுடன், தெர்ல சார் அது என்னன்னு தெரியரதுக்குள்ளவே நாய அடிக்குற மாதிரி அடிச்சி ரத்தம் செதன்னு கிழிச்சிட்டிங்களே” என்பார் பரியேறும் பெருமாள். தொடர்ந்து, பாப்போம் நாளைக்கு எதுவேன்னா எப்படிவேன்னா மாறலாம் இல்லையா என ஜோவின் தந்தை சொன்னவுடன், “எனக்கு தெரியும் சார், நீங்க நீங்களாவே இருக்குற வரைக்கும், நான் நாயாவேதான் இருக்கனும்னு நீங்க ஆசப்படுற வரைக்கும் இங்க எதுவுமே மாறாது” என்பான் பரியேறும் பெருமாள். இத்தகைய வசனங்களுடன் பெரிய உயரத்துக்கு தான் ஏறியிருப்பான் பெருமாள். டீ கடைக்கு சென்ற ஜோதி டீவாங்கி வர மூவரும் சிரித்து பேசி இடத்தில் இருந்து நகர்ந்து செல்வதாக படத்தின் இறுதி காட்சிகள் அமைந்திருக்கும். இதில், பெண்ணின் தந்தை பேசிய வார்த்தைகளும், பெருமாள் பேசிய வார்த்தைகளும் மிக குறைவாக இருந்தாலும், படம் பார்த்த ரசிகர்கள் அனைவரையும் கட்டி ஈர்த்திருப்பார் இயக்குநர்.

தமிழ் சினிமாவில் சாதி ஆதிக்கத்தை தோலுரித்தி காட்டியதில் 2019ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இப்படத்தில் பஞ்சமி நில உரிமை குறித்தும், அதை வாங்கும் விற்கும் அதிகாரம் குறித்தும் விரிவாக விளக்கப்பட்ட காட்சிகள் மக்களுக்கான விழிப்புணர்வாகவே பார்க்கப்பட்டது.“கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே, அந்தாப்ல தலமேல ஏறி உட்காந்துக்கீடுவிங்களே, நீ கட்டிக்கப்போர பொண்ணு தலைல செருப்பு வச்சதும், என் சொந்தக்கார பய ஊர் முன்னாடி அடி வாங்குறதும் ஒன்னாலே” என்று கூறும் ஆதிக்க சாதியினரிடையே எவ்வளவு வன்மம் புதைந்துகிடக்கிறது என்பது காட்டப்பட்டிருக்கும். பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம், வன்முறை வேண்டாம் என்ற கருத்தை வன்முறை காட்சிகளோடு காட்டியது அசுரன் திரைப்படம். அதனாலேயே இந்த திரைப்படம் கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடுத்த பரிமானத்தில் கடந்த ஆண்டு வெளியான கர்ணன் திரைப்படமும் சாதிய பிரச்னைகளையும், அதனால் ஒடுக்கப்பட்டவர்கள் சந்திக்கும் சவால்களையும் விளக்கியது. 1995ல் நடந்தேறிய கொடியன்குளம் கலவரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படத்தில் பேருந்து வசதி கேட்கும் ஒடுக்கப்பட்டவர்களை காவல்துறையினர் துன்புருத்தும் காட்சிகளும், ஆதிக்க வர்க்கத்தினரின் கடுமையான போக்கும் எதிரொலித்திருக்கும். திரைப்படத்தில் கதாநாயகன் தனுஷ் போலீஸை அடித்து உதைத்து நிமிர்ந்து பேசும் வசனங்கள் ரசிகர்களை தியேட்டர்களே அதிரும் அளவுக்கு கத்தச் செய்தது. “கந்தைய்யா மகனுக்கு கண்ணபிரான்னு பேர் வைக்கலாம், மாடசாமி மகனுக்கு கர்ணன்னு பேர் வைக்கக்கூடாதாடா” என்று ஆக்ரோஷப்படுவான் கர்ணன். தொடர்ந்து, உங்களுக்கு என்னோட பிரச்சனை என்னன்றது முக்கியம் இல்ல, உன் முன்னாடி எப்படி பேசுறேன், எப்படி நிக்கிறேன்றதுதான் முக்கியமா?, நிமிர்ந்து பாத்தாலே அடிப்பிங்களாலே என்ற கர்ணனின் வசனம் ஒட்டுமொத்த மக்களின் ஒற்றைக்குரலாக ஓங்கி ஒலிக்கும். பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் பிரச்னைகளை பேசி தீர்க்கலாம் என்ற பாணியிலிருந்து கர்ணனில் திருப்பி அடி என்ற வன்முறையை கையாண்டிருப்பார் மாரி செல்வராஜ்.. ஆனாலும் சமூதாயத்திற்கு தேவையான, அனைவரும் கொண்டாடும்படியான படமாகவே கர்ணன் வெற்றிநடைப்போட்டது.
இந்த வரிசையில்தான் அதே ஆண்டில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பேசும் படங்களின் பட்டியலில் பிரதான இடத்தை பிடித்துள்ளது. 1993 காலகட்டத்தில் நடந்தேறிய உண்மை சம்பவத்தை படமாக்கிய இயக்குனருக்கும், படத்தின் நாயக தோற்றத்தில் நீதி கேட்டு போராடிய சூர்யாவுக்கும் படத்தின் மூலம் பிரச்னை ஏற்பட்டாலும், உண்மையில் பாதிக்கப்பட்ட பார்வதியின் கதை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது. பின்னாட்களில் நீதியரசராக மாறியிருந்த அப்போதைய வழக்கறிஞ்சராக இருந்த சந்துருவின் கதாப்பாத்திரத்தில் சூர்யா நடிக்கவே, உண்மையில் நடந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துசேர்ந்தது.
இந்த படத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு கொடூரமாக காவல்துறை விசாரணையின் போது அடித்து கொலை செய்யப்பட்டதும், அதனை மறைத்த காவல்துறை மற்றும் ஆதிக்க வர்க்கத்தினரின் சூழ்ச்சியும், அனைத்தையும் தாண்டி போராடிய செங்கேனி என்ற பார்வதியின் கதையும் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானதாக அமைந்தது.
இதனைத்தொடர்ந்து சாதி பாகுப்பாட்டால் ஒடுக்கப்பட்டவர்கள் படும் துயரத்தை வெளிக்காட்டும் முயற்சியாக வெளிவந்துள்ளது உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி. யாரெல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களின் உள் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பாகவே வெளிவந்துள்ளது நெஞ்சுக்கு நீதி. தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண் சமைத்த சமையலை பார்த்து, நீ ஆக்குன சோத்த எங்கூட்டு பசங்க சாப்படமாக்கு, அத உங்க வீட்டு பன்னிகளுக்கும், பசங்களுக்கும் போடுறதோட நிறுத்திக்கோ என்பதில் துவங்கி, அவங்க குளிச்சா அழுக்காகாத தண்ணி, நாங்க குடிச்சா அழுக்காகிடுமாங்க சார் போன்ற கேள்விகள் படத்தில் இடம்பெற்றவை. இப்படித்தான் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும், ஆதிக்க வர்க்கத்தினரின் கொடுமையை தோலுருத்திருக்கும். 2 தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தூக்கிலிடப்படுவதும், அது உயிரிழப்பு என்று சித்தரிக்கப்படுவதும் படத்தை எதார்த்தமாக்குகிறது.
படத்தை பார்க்கும் சிலர் இவையெல்லாம் சாத்தியமா என்று கேட்டால், இன்றளவும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடந்தேறும் ஆணவக் கொலைகள் சாட்சியமாக இருக்கின்றன. நாங்கள் யாரும் சாதி பார்ப்பதில்லை, அனைவருமே ஒன்றுதான் என்று பொய் பேசி வன்மத்துடனும், ஆதிக்க எண்ணத்துடனும் சுற்றித்திரிபர்களுக்கு பாடமாகவே தமிழ் சினிமாவின் தற்கால திரைப்படங்கள் வெளியாகிறது என்கின்றனர் சினிமாவை அறிந்தவர்கள். ஒடுக்கப்பட்டவர்களை தொடர்ந்து அடித்து துன்புருத்தினால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை சாணி காயிதம் சொல்கிறது என்கிறார்கள் தமிழ் சினிமாவை கொண்டாடுபவர்கள். எல்லாருமே சமம்னா, அப்போ யார் தான் ராஜா என்ற கேள்விக்கு, எல்லாருமே சமம்ன்னு யார் நெனைக்கிறாங்களோ அவங்கதான் ராஜா என்ற நெஞ்சுக்கு நீதி கூறும் கருத்து சினிமாவுடனே ஒன்றிப்போன வாழ்க்கையை கொண்டுள்ள தமிழர்களுக்கு உண்மையில் தேவையான பாடம்தான்…
எழுத்து; யுவராம் பரமசிவம்













