முக்கியச் செய்திகள் சினிமா

உலக அரங்கை அதிரவைக்கும் தமிழ் சினிமா…

தமிழ் சினிமா தன்னுடைய தரத்தை இழந்துவிட்டதாக சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் படங்களின் பங்கு அதிகரித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா உலக புகழ் பெற்றது. இந்த ஆண்டு 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. மே மாதம் 17 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவும் தங்களின் திரைப்படம் இந்த விழாவில் திரையிடப்பட வேண்டும் என்பதும் திரைக் கலைஞர்களின் கனவாக இருந்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் மாதவன், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட 11 பேர் பங்கேற்க உள்ளனர்.

சமீப காலமாக தமிழ் திரைப்படங்களின் தரம் குறைந்து விட்டதாகவும் மற்ற மொழி படங்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் சில குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்ரி: த நம்பி எஃப்கெட் திரைப்படம் 19 ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரையிடப்பட உள்ளது.

அதேபோல பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள இரவின் நிழல் படமும் திரையிடப்பட உள்ளது. சுமார் 100 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய லி மஸ்க் என்னும் குறும்படம் திரையிடப்படவுள்ளது. 36 நிமிடங்களே ஓடக்கூடிய இந்த குறும்படம் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

பா.இரஞ்சித் எழுதி இயக்கியுள்ள வேட்டுவம் என்னும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட உள்ளது. இப்படி சர்வதேச அளவில் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெருமை மட்டுமல்ல தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரூ.6 கோடி கட்டணத்தில் விண்வெளி சுற்றுலா – இஸ்ரோவின் புதிய திட்டம்

Web Editor

பிபிசி ட்வீட் சர்ச்சை – காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அனில் கே ஆண்டனி

Web Editor

தங்கத்தில் மின்னும் பிரதமர் மோடி சிலை!

Jayasheeba