இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லவுள்ளதாக நடிகர் சிலம்பரசன் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டி.ராஜேந்தருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை குறைவு காரணமாக, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில்கடந்த 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக அவரது மகனும், நடிகருமான சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/SilambarasanTR_/status/1529061514132410370
அந்த அறிக்கையில், “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார்.
கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.







