பெரம்பலூர் நகர் அருள்மிகு மரகதவல்லி தாயார் மதனகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பெரம்பலூர் நகர் பழைய பேருந்து நிலையம் அருகில் , பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பஞ்சபாண்டவர்கள் வழிபட்டதால் சகோதர்கள் பிரச்னைகளை நிவர்த்தி செய்யும் பரிகார ஸ்தலமாகவும், வியாக்ரபாத முனிவர் பூஜித்து சாப நிவர்த்தி பெற்றதும், பஞ்ச பாண்டவர்களால் உருவாக்கப்பட்ட சகல நோய்களும் தீர்க்கும் அற்புதமான நந்தியாவட்டையைத் தல விருட்சமாகக் கொண்ட சிறப்பு பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது இக்கோயில்.
இங்கு பங்குனி உத்திர பெருவிழாவானது, கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் . இதற்காக அங்குரார்ப்பண பூஜை நடைபெற்று, அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டப் பின்பு கொடியேற்றப்பட்டது.
விழாவில் ஒரு பகுதியாக, ஏப்ரல் 1 ஆம் தேதி வெள்ளி கருட சேவையும், முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், ஏப்ரல் 5 ம் தேதி நடைபெற உள்ளது.
—சௌம்யா.மோ






