காஞ்சிபுரத்தில் வீடு கட்ட திட்ட அனுமதி பெறுவதற்காக லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஐயங்கார் குளம் ஊராட்சி.இதன் ஊராட்சி மன்ற தலைவியாக அதிமுக ஆதரவாளர் வேண்டா சுந்தரமூர்த்தி என்பவர் பதவி வகித்து வருகிறார்.புவனா என்பவர் ஊராட்சி செயலாளராக உள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஐயங்கார் குளம் பகுதியில் வீட்டுமனை ஒன்றை வாங்கியுள்ளார்.
அதில் வீடு கட்டுவதற்காக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் திட்ட அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார்.அதற்கு பஞ்சாயத்து தலைவி வேண்டா சுந்தரமூர்த்தி அனுமதி கொடுக்க வேண்டுமென்றால் ரூபாய் 15,000 லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே அனுமதி தரப்படும் என தெரிவித்துள்ளார்.ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.
இதனையடுத்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டிஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான காவல்துறையினர் ராசாயண பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து அதனை பஞ்சாயத்து தலைவி மற்றும் செயலாளரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பினர்.இதனை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி ரசாயண ரூபாய் நோட்டுகளை பஞ்சாயத்து தலைவரிடம் கொடுப்பதற்காக ஊராட்சி அலுவலகம் சென்றுள்ளார்.
ஊராட்சி தலைவர் வேண்டா கிருஷ்ணமூர்த்தி கூறிய படி அதனை செயலாளர் புவனாவிடம் கொடுத்துள்ளார்.இதனை அப்பகுதியில் பதுங்கி இருந்து பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பஞ்சாயத்து தலைவி மற்றும் செயலாளரை பிடித்து கைது செய்தனர்.லஞ்சம் வாங்கிய புகாரி ஊராட்சி தலைவி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-வேந்தன்







