பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் எதிரொலி : ஜாமியா பள்ளிவாசலில் 3வது வாரமாக தொழுகை ரத்து..!

பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் எதிரொலியாக ஜாமியா பள்ளிவாசலில் 3வது வாரமாக வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் நடந்த சண்டையில்…

பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் எதிரொலியாக ஜாமியா பள்ளிவாசலில் 3வது வாரமாக வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் நடந்த சண்டையில் 1,756 குழந்தைகள் உட்பட குறைந்தது 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  மேலும் 13,561 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோல இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 20வது நாளாக நடைபெற்று வரும்  போரில் இருதரப்பில் இருந்தும் சுமார் 8000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அக்டோபர் 7ம் தேதி நடந்த தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டு 210 பேரைக் கைப்பற்றிய பின்னர்,  சுமார் 1,500 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் அமெரிக்க , இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவளித்தன. அதேபோல ரஷ்யா, வடகொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உள்ளிட்டவை பாலஸ்தீனத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதுகாப்பு காரணமாக ஸ்ரீநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா பள்ளிவாசலில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக வெள்ளிக்கிழமை தொழுகையானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

  வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்பட்டதை தொடர்பாக  ஹுரியத்  அமைப்பின் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபரூக் தெரிவிக்கையில் “ ஸ்ரீநகரின் நௌஹட்டா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜாமியா பள்ளிவாசலில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கப் பாதுகாப்புப் பணியாளர்கள் பள்ளிவாசலை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர்.  போரினால் ஒருபோதும் அமைதி கிடைக்காது, அது அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும். மேலும் அவநம்பிக்கை, பாதுகாப்பின்மையை உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.