கோடை வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பழனி கோயில் யானைக்கு அமைத்து தரப்பட்டுள்ள நீச்சல் குளத்தில், மிகுந்த மகிழ்ச்சியுடன் யானை கஸ்தூரி ஆனந்த குளியல் போட்டது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு கடந்த 49 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயதில் கஸ்தூரி யானை வந்தது. யானை கஸ்தூரி பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள காரமடை தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது. தற்போது 57 வயதாகும் யானை கஸ்தூரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களில் பங்கேற்கிறது. பழநியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் நெருக்கமான யானையாக கஸ்தூரி திகழ்கிறது.
பழநியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாலை வேளையில் அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் பகலில் வாட்டி வதைக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் சிரமப்படுகின்றன.அதனால் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக், கஸ்தூரி யானை காலையில் சாதாரண குளியல், மாலையில் நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் என தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது.
இதற்காக, காரமடை தோட்டத்தில் 10 லட்சம் ரூபாய் செலவில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் நிரப்பப்பட்ட அந்த நீச்சல் குளத்தில் கஸ்தூரி யானை படுத்து, நீந்தி விளையாடி மகிழ்ந்தது. மேலும் யானை குளிப்பதற்காக பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் ஷவர் பாத்தும் அமைக்கப்பட்டுள்ளது
இது தவிர, கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ளும் வகையில், யானை கஸ்தூரிக்கு தர்பூசணி, இளநீர் மற்றும் பழங்கள் உணவாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








