யார் இந்த ஷெபாஸ் ஷெரீப்…?

பாகிஸ்தானின் பரபரப்பான அரசியல் மாற்றங்களின் இறுதியாக அந்நாட்டின் பிரதமராக தேர்வாகியுள்ளார் ஷெபாஸ் ஷெரீப். காஷ்மீரி வம்சாவளியான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமரானது எப்படி…? பாகிஸ்தான் நாட்டில் இதுவரை பிரதமராக இருந்த எவரும் 5 ஆண்டுகள்…

பாகிஸ்தானின் பரபரப்பான அரசியல் மாற்றங்களின் இறுதியாக அந்நாட்டின் பிரதமராக தேர்வாகியுள்ளார் ஷெபாஸ் ஷெரீப். காஷ்மீரி வம்சாவளியான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமரானது எப்படி…?
பாகிஸ்தான் நாட்டில் இதுவரை பிரதமராக இருந்த எவரும் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்ததில்லை என்பது வரலாறு. இந்த முறையாவது இது மாற்றியமைக்கப்படுமா என்று எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களின் காரணமாக ஆட்சியை இழந்து அதே வரலாற்றில் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார் இம்ரான் கான்.

இம்ரான் கானின் ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடையும் நிலையில், ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறார். இதன் மூலம், பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் ஆட்சியை இழந்த முதல் பிரதமராகியிருக்கிறார் இம்ரான் கான்.

இந்த நிலையில்தான் தற்போது அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் உள்ள அனந்தநாக் பகுதியை சேர்ந்த முகமது ஷெரீப் எனும் தொழிலதிபர் தனது குடும்பத்துடன் அமிர்தசரஸில் குடியேறினர். இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு கடந்த 1964-ம் ஆண்டு முகமது ஷெரீப் தனது மனைவி மற்றும் நவாஸ் ஷெரீப், ஷெபாஸ் ஷெரீப் ஆகிய இரு மகன்களுடன் பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு சென்றார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதலமைச்சராக 1988-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அந்த மாகாணத்தின் சட்டப்பேரவை உறுப்பினராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வானார்.

அதற்கடுத்த ஆண்டுகளில் பாகிஸ்தான் அரசியலில் ஷெரீப் சகோதரர்கள் முக்கிய தலைவர்களாக உருவெடுத்தனர். நவாஸ் ஷெரீப் அந்நாட்டின் பிரதமராக இருந்த போது, 1997-ம் ஆண்டுக்கு பஞ்சாப் மாகாண முதலமைச்சராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். 1999-ம் ஆண்டு ராணுவ தளபதி பர்வீஷ் மு ஷரப் தலைமையிலான ராணுவ புரட்சியால் நவாஸ் ஷெரீப்-ன் அரசு கலைக்கப்பட்டாதால், ஷெபாஸ் ஷெரீப் தனது குடும்பத்தினருடன் சவூதி அரேபியாவில் 8 ஆண்டுகள் வசித்தார். அதன் பின்னர் 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார்.

இதனைத்தொடர்ந்து 2008-ம் ஆண்டு 2-வது முறையாகவும், 2013-ம் ஆண்டு 3-வது முறையாகவும் பஞ்சாப் மாகாண முதலமைச்சராக ஷெபாஸ் ஷெரீப் பதவி வகித்தார். ‘பனாமா பேப்பர்’ வழக்கில் நவாஸ் ஷெரீப் நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக ஷெபாஸ் ஷெரீப் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 2018-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரானார்.

2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பண மோசடி மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக இம்ரான் கான் அரசால் தொடரப்பட்ட வழக்கில் ஷெபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது வழக்கு தொடரப்பட்டதாக ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் பல மாதங்கள் அவர் சிறையில் இருந்தார். அதன் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தான், பாகிஸ்தானில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் இம்ரான்கான் தான் காரணம் என்று கூறி அவருக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த 3-ம் தேதி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மனம் கொண்டுவந்தன. இதனையடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ரத்து செய்து துணை சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும், பிரதமர் இம்ரான்கானின் பரிந்துரையின்படி, நாடாளுமன்றத்தை கலைத்து மறு தேர்தல் நடத்த அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார். இது குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்திய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன்மூலம் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

இதனையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஷெபாஸ் ஷெரீப். தான் கலந்து கொள்ளும் பேரணிகள் மற்றும் பரப்புரை கூட்டங்களில் புரட்சி கவிதைகளை உதிர்க்கும் ஷெபாஸ் ஷெரீப். இம்ரான் கான் அரசு மிகப் பெரிய அரசியல் நெருக்கடியில் சிக்கியிருந்த தருணத்தில் “நீங்கள் எல்லா பூக்களையும் வெட்டலாம், ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது” என்று நாடாளுமன்றத்தில் ஷெபாஸ் ஷெரீப் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஷெபாஸ் ஷெரீப் கூறிய வசந்தம் இப்போது வந்துவிட்டதாக கருதுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். பாகிஸ்தானின் பிரதமர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஷெபாஸ் ஷெரீப் உருவாக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்….

– வசந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.