நெல்லை திருக்குறுங்குடி கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்படுவதால் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு அருகே திருக்குறுங்குடியில் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் திருக்குறுங்குடி, களக்காடு, மாவடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். தனியார் வியாபாரிகளை விட அரசு கொள்முதல் நிலையத்தில் நெல்லுக்கு கூடுதல் தொகை கிடைப்பதால் விவசாயிகள் இங்கு விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஆன்லைனில் பதிவு செய்து, டோக்கன் பெற்று வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நெல்லை கொள்முதல் செய்வதில் காலதாமதமும், முறைகேடும் நடந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் நிலையம் அருகில் திறந்த வெளியில் பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்து, டோக்கன் பெற்ற பின்னர் கொள்முதல் செய்ய 1 மாதம் வரை காத்திருக்க வேண்டியதுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
இதனால் நெல் மூட்டைகள் பெருமளவில் தேக்கம் அடைந்துள்ளன. இதனிடையே கடந்த வாரம் பெய்த கோடை மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்துள்ளன. இது பெருமளவில் இழப்பை ஏற்படுத்தி உள்ளது என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அதேவேளையில் நெல் கொள்முதல் நிலையத்தை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு மூடினால் நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்பு அடைவார்கள். எனவே கொள்முதல் நிலையத்தில் காலதாமதமின்றி முறைகேடு இல்லாமல் நெல்லை கொள்முதல் செய்யவும், நிலையம் செயல்படுவதை காலநீட்டிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.