பல்லடம் அருகே, சித்தம்பலம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களோடு, பல்லடம் 18 ஆவது வார்டு கவுன்சிலர், வண்ணப் பொடிகளைப் பூசி ஹோலி கொண்டாடினார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்கள் பரவி வரும் நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், பல்லடம் நகராட்சி 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சசிரேகா ரமேஷ்குமார், வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும், தமிழர்களுடன் சகோதரத்துவத்தோடு அவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில், தனது குடும்பத்துடன், பல்லடம் அருகே சித்தம்பலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும், அவர்களோடு ஹோலிப் பண்டிகையை வண்ண பொடிகளைப் பூசி கொண்டாடினார். வடமாநில தொழிலாளர்களும் அவருக்கு வண்ணப் பொடிகளைப் பூசி மகிழ்ந்தனர்.
பல்லடம் பகுதியில் வட மாநில தொழிலாளர்களுக்கு என்றும் பாதுகாப்பாக இருப்போம் எனவும் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளோம் எனவும் சசிரேகா ரமேஷ் குமார் உறுதி அளித்தார். அங்கிருந்த வடமாநில இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் வண்ணப் பொடிகளைப் பூசி மகிழ்ந்தனர்.






