மூணாரில், கொம்பனைத் தொடர்ந்து படையப்பா என்னும் காட்டு யானை ஊருக்குள் விடிய விடிய உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரளா மாநிலத்தின் மூணாரில், கடந்த சில மாதங்களாக படையப்பா மற்றும் கொம்பன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. குடியிருப்பு பகுதி மற்றும் நகரின் கடைவீதி பகுதிகளில், பகல் மற்றும் இரவு வேளையில் உலா வருகின்றன.
மேலும் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்துவது, வாகனங்களை துரத்துவது, உணவுப் பொருட்களை எடுத்து உண்பது, வீடுகளை இடித்து சேதப்படுத்துவது, வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி வீசுவது என தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்த சிறுவன்; 2 கி.மீ தூரம் ஓடி உற்சாகப்படுத்திய தாய் – மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி
இந்நிலையில் படையப்பா என்னும் காட்டு யானை மூணார் பகுதியில் நேற்று நள்ளிரவு புகுந்தது. விடிய விடிய நகரின் பல்வேறு கடைவீதி பகுதிகளுக்கு சென்ற நிலையில் அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளிலும் படையப்பா உலா வந்தது.
இதனால், அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டுப் பகுதியை படையப்பா கடக்கும் வரை, அமைதியாக அச்சத்துடன் வீட்டின் உள்ளேயே முடங்கி இருந்தனர். நாள்தோறும் படையப்பா மற்றும் கொம்பன் காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில் கொம்பன் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, வனத்துறை தொடர்ந்து முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.







