சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,83,76,524 ஆக உள்ளது. மேலும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,04,832 ஆக உள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் நேற்றைய தினத்தில் 107 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்தனர். டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த நிலை தமிழகத்திலும் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இன்று காலையில் கொரோனா சிகிச்சைக்காகச் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருந்தனர். கொரோனா சிகிச்சைக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நோயாளிகள் ஆம்புன்ஸில் காத்திருக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.







