டெல்லிக்கு தேவையான 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் முழுமையாக எப்போது வழங்கப்படும் என மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியின் பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. மத்திய அரசு தொகுப்பில் இருந்து வழங்க வேண்டிய 480 மெட்ரிக் டன் ஆக்சிஜனில் 100 மெட்ரிக் டன் மேலாக பற்றாக்குறை நீடிப்பதாக டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் நிலைமை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும்,. ஆக்சிஜன் கிடைக்காவிட்டால், ஏதாவது மிகப்பெரிய பேரழிவுகள் நடக்கலாம்” எனவும் டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
டெல்லிக்கு வழங்கவேண்டிய 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எப்போது கிடைக்கும் என்ற விவரத்தை சரியாக கூறுங்கள் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். இதனிடையே டெல்லி மருத்துவமனைகள் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு ஆக்சிஜன் வழங்கப்பட்டது குறித்த அறிக்கையை டெல்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







