புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி, அசோக் செல்வன், சரத் குமார் நடித்த ‘போர் தொழில்’ திரைப்படத்தின் ஒடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு இளம் இயக்குநர்களின் படங்கள் வரிசையாக கவனம் ஈர்த்து மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி வருகின்றன. முதலில் கடந்த பிப்ரவரி மாதம் கணேஷ் பாபு என்கிற புதுமுக இயக்குநர் இயக்கி, கவின் நடித்த ’டாடா’ திரைப்படம் வெளியாகி எதிர்பாராத வெற்றி கண்டது. அடுத்ததாக மார்ச் மாதம் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த அயோத்தி திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த குட்நைட் திரைப்படம் குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ள படம் போர் தொழில். விக்னேஷ் ராஜா என்கிற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.
ராட்சசன் படத்தைப் போல் தரமான திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரூ.5.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 50 கோடிக்கும் அதிகமான வசூல் மழையை குவித்தது. இப்படத்தில் காவல் அதிகாரிகளாக அசோக் செல்வன், சரத் குமார் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை சோனி நிறுவனமே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
https://twitter.com/i/status/1686278776177442817
- பி.ஜேம்ஸ் லிசா








