பழனி கோயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக ஆடியோ வெளியான நிலையில், கோயில் தரப்பில் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கடந்த 9ஆம் தேதி ஈரோட்டைச் சேர்ந்த செந்தில் என்பவர் தனது மகளுடன் சாமி தரிசனம் செய்யவந்துள்ளார். கோயில் ஊழியர்கள் தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கருவறை முன்பு நின்றிருந்த தனது மகளை கோயில் ஊழியர்கள் தொட்டு தள்ளியதாகவும், தாம் அவர்களை எச்சரித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அங்கு பணியில் இருந்த கோயில் கண்காணிப்பாளர் சந்திரமோகன் கண்டு கொள்ளவில்லை என கூறியிருந்தார்.
இந்த ஆடியோ இணையத்தில் வைரலான நிலையில், கோயில் தரப்பில் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அதில், கருவறை மற்றும் மூலவரை வீடியோ எடுத்த பெண்ணை ஊழியர்கள் கண்டிப்பது தெரியவந்துள்ளது. உண்மையை மறைத்து பெண்ணை தொட்டு தள்ளியதாக ஆடியோ வெளியிட்டு அவதூறு பரப்பிய நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







